
ஆரம்பத் தோற்றம்
வடபுல மக்களின் பலவந்த வெளியேற்றம் முஸ்லிம்களின் ஒரு பகுதியினரை வெறுமைச் சமூகமாக மாற்றும் ஆபத்து நிலவியதை இலங்கை முஸ்லிம்கள் மறப்பதற்கில்லை. புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் நேசக்கரங்கள்தான்,வடபுல முஸ்லிம்களை தொண்ணூறின் துயரங்களிலிருந்து மீட்டது. இந்த வரலாறு, இறைதூதர் முஹம்மது நபியவர்களின் புலப்பெயர்வை (ஹிஜ்ரத்) எமது மனக்கண்முன் கொண்டு வருகிறது, இதை, ஞாபமூக்கட்டும் நோக்கிலேயே இங்கு முஹாஜிரீன் என்ற பெயரைத் தாங்கி அரபுக்கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.
இடப்பெயர்வின் அத்திவாரத்திலிருந்து எழும்பியதே இஸ்லாம். இலட்சியத்தை உயிரூட்டும் யாத்திரைகளாக உள்ள இவ்வாறான இடப்பெயர்வுகளில், முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேரும் துயரங்களில் சகோதர முஸ்லிம்கள் பங்கெடுத்தும், தோள் கொடுத்தும் உதவியுள்ளனர்.
இவ்வாறான உதவிகள் வடபுல முஸ்லிம்களின் துயரங்களின்போதும் கிடைத்தன. இதனால், இச்சமூகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. இவ்வுதவிகளில், அரசியல் பிர முகர்களின் உதவிகள் பிரபல்யமானவை. மீள்குடியேறல் சாத்தியமே இல்லை என்றாகிவிட்ட சூழலில், நிரந்தர வதிவிடங்களுக்கு வடபுல மக்கள் தயாராகினர். இவர்களின் பிள்ளைகளின் கல்வித் தேவைகளுள் ஒன்றாக மார்க்க கல்விக்கும் முன்னுரிமையளிக்க மௌலவி அஷ்ஷெய்க் முபாரக் அல்ர ஷாதி முன்வந்தார்.
முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் தோற்றம்
இறைமறையை மனனம் செய்யும் இருபது ஹாபிழ் மாணவர்களுடன் 2000.06.15 இல், தாருல் முஜாஹிதீன் எனும் பெயருடன் அல் ஜித்தா கிராமத்தில், இந்த அரபுக்கல்லூரி ஆரம்பமானது. மௌலவி எஸ்.எச்.எம்.ஏ முபாரக் ரஷாதியின் முழு முயற்சியிலும், மௌலவி ஏ.ஆர்.பரீதின் ஒத்துழைப்பிலும் ஆரம்பமான இக்கல்லூரிக்கு ஹஸனாத் பள்ளிவாசல் நிர்வாகிகளின் உதவியும் கிடைத்தது. இது மாத்திரமன்றி முன்னாள் அதிபரான மர்ஹூம் பி.எம்.காஸிம் தனிப்பட்ட ரீதியில் ஒத்தாசை மற்றும் ஊக்குவிப் புக்களை வழங்கினார். இக்கல்லூரியின் ஸ்தாபகரான முபாரக் மௌலவியே, இதன் ஆரம்ப அதிபராகச் செயற்படுகிறார். பாடசாலைக் கல்வியுடன் பகுதி நேரமாக இயங்கிய இந்த மத்ரஸா, பின்னர் முழு நேர மார்க்க கல்விக் கூடமாக மிளிரத் தொடங்கியது. இவ்வாறு இயங்கி வந்த நிலையில் எதிர் கொள்ள நேர்ந்த இடநெருக்கடிகள், தாருல் முஜாஹிதீன் அரபுக்கல்லூரியை மாதிரிக் கிராமங்களில் ஒன்றான அஸாமாபாத்துக்கு இடமாற்ற வைத்தது. இதற்காக, தமது சொந்தக்காணியில் அரை ஏக்கரை வழங்கி உதவிய தனவந்தரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.
கல்லூரியின் ஆரம்ப நிலை
புறச்சூழலில் எதிர்நோக்கப்பட்ட சகல சவால்களையும் வெற்றிகரமாக முறியடித்த இக்கல்லூரியின் ஒஸ்தாதுகள் (ஆசிரியர்கள்) மாணவர்கள் ஆகியோர், காணியைத் துப்புரவு செய்து 18 அடி அகலமும் 25 அடி நீள முமுடைய ஓலைக்குடிசையை 2001.10.17 இல் அமைத்து, கற்றல் பணிகளைத் தொடங்கினர். இக்கல்லூரிக்கு அல்லாஹ் வின் அருட்கொடை உண்டென்பதற்கான அத்தாட்சிகள் பல உள்ளன.
அல்லாஹ்வின் அருட்கொடைக்கான
அத்தாட்சிகள்
"ஆனைப்பிள்ளையூற்று" எனும் பிரப லமிக்க நன்னீர் கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கும் நாற்பது அடிக்கு மேலுள்ள உயரமான மேட்டுப்பகுதியில் மதுரமான குடிநீரை அல்லாஹுத்தஆலா எமது கல்லூ ரிக்கு வழங்கினான். 16 அடி அகலமும் 40 அடி ஆழமுமுள்ள இக்கிணற்றை அமைக்க உதவிய வள்ளல்களையும் இந்நாளில் நினை வுகூர்கிறோம். இக்கிணற்று நீர், சுற்றுப்புற கிராமத்தவர்களுக்கும் உதவியாக உள்ளது.
மத்ரஸாவின் ஆரம்பக்கட்டடம்.
தெஹிவளையைச் சேர்ந்த தனவந்தர் ஒரு வரின் நிதியில் அறுபது அடி நீளமும் நாற்பது அடி அகலமும் உள்ள கட்டடத்துக்கு 2002 இல், அடிக்கல் நடப்பட்டது. வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரான அல்ஹாஜ் நவவி இதற்கு அடிக்கல் நட்டார். ஸ்தாபகர் மௌலவி முபாரக்கின் அயராத முயற்சி மற்றும் பிரதேசத்தவர்களின் ஒத்துழைப்பால் மிக விரைவில், அழகிய கட்டடமாக இது காட்சியளிக்கத் தொடங்கியது.
அபிவிருத்திப் பணிகள்
கல்லூரியின் இறைகல்விப் போதனைகள் சகலரையும் கவர்ந்ததால், மாணவர்களின் வருகை அதிகரித்தது. இவர்களுக்கு, தொழுகை அறைகள், தூங்குமிடம் மற்றும் உணவு உட்கொள்ளல் என்பவற்றுக்காக இடங்களை விஸ்தரிக்க வேண்டி ஏற்பட்டது. இதனால், இங்கு முதலாவதாக 2002 இல் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டதுடன், சவூதி அரேபியாவின் தனவந்தர் அஷ்ஷேக் ஸாமில் அவர்களின் நிதியுதவியில் 2004 நடுப்பகுதி யில் மூன்று மாடிக்கட்டடம் நிர்மாணித்து பூர்த்தியாக்கப்பட்டது. இதேபோன்று, ஏனைய தேவைகளும் பூர்த்தியாகின.
இவ்வளர்ச்சிப் பாதையில், நூலகசாலையை நிர்மாணிக்க எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.ஏ.தாஹிர் முன்வந்து முயற்சித்து, தனவந்தர் ஒருவரிடமிருந்து அரை ஏக்கர் காணியைப் பெற்றுத்தந்தார். வளர்ச்சிப் பாதையின் முக்கிய மைல்கல்லாக, இதன் பெயர் மாற்றப்பட்டதைக் குறிப்பிடலாம்.
